Print this page

பெசண்டம்மையாரின் முடிவு. குடி அரசு - இரங்கல் செய்தி - 24.09.1933 

Rate this item
(0 votes)

தோழர் அன்னிபெசண்ட் அம்மையார் 20-9-33ந் தேதி மாலை 4 மணிக்கு சென்னை அடையாற்றில் முடிவெய்தி விட்டார்கள். அம்மை யாரின் வாழ்வு பெண்மணிகளுக்கு ஒரு படிப்பினையாகும். ஆண்களுக் கும் ஓர் அறிவுருத்தல் ஆகும். 

பெண்கள் “பாபஜென்மம்” என்றும், "பேதமையென்பது மாதர்க் கணிகலம்” என்றும், பெண்கள் ஆண்களின் காவலுக்குட்பட்டு இருக்க வேண்டியவர்கள் என்றும், அறியாமையும். அயோக்கியத்தனமும், முட்டாள் தனமும், மூர்க்கத்தனமும் கொண்ட வாக்கியங்களை பொய்யாக்கி அவற்றில் பொதிந்துள்ள சூழ்ச்சிகளை வெளியாக்கவென்றே தோன்றியவர் என்று கருதும்படியானவர் நமது பெசண்டம்மையார். 

தோழர் பெசண்டம்மையார் ஒரு பாதிரியாரின் மனைவியாவார். பாதிரி களின் கொடுமையும், பித்தலாட்டமும் அம்மையாரை நாஸ்திகமாக்கி, தெய்வம் இல்லை என்று பிரசாரம் செய்யும்படி செய்தது. பிறகு புருஷனை விட்டுப் பிரிந்தார். பிறகு கர்ப்பத்தடையை யாவருக்கும் பிரசாரம் செய்து வந்தார். கர்ப்பத்தடையை சட்ட சம்மந்தமாக்கினார். அக்காலத்திலேயே அரசாங்கத்தையும் எதிர்த்து பிரசாரமும் செய்தார். 

பின்னர் தனது 32-ம் வயதுக்கு மேல் மறுபடியும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தார். பிறகு பல புத்தகங்களை எழுதினார். அதன் பிறகு பிரம்ம ஞான சங்கத்தில் சேர்ந்தார். அதன் பிறகு இந்தியாவுக்கு வந்தார். வந்து அச் சபையின் உலக தலைவரானார். 

பிறகு சென்னையை வாசஸ்தலமாகக் கொண்டார். கிறிஸ்து மதத்தை கண்டித்து இந்துமத தத்துவ பிரசாரம் என்னும் பார்ப்பன மதப்பிரசாரம் செய்தார். 

இதனால் சென்னையில் உள்ள விபூதிபூசும் பார்ப்பனரிடம் மிக செல்வாக்கு அடைந்தார். ஹை கோர்ட்டு ஜட்ஜுகள் உள்பட அனேக பெரிய பதவியாளர்களை தனக்கு சிஷ்யராகக் கொண்டார். அரசாங்கத்திலும், ஓரளவு செல்வாக்குப் பெற்று விபூதிப் பார்ப்பனர்களுக்கு அச்செல்வாக்கை பெரிதும் உதவினார். இதுகண்டு பொறாத சென்னை நாமம் போடும் அய்யங்கார் பார்ப்பனர்கள் அம்மையாருக்கு பல தொல்லைகளை விளைவித்தார்கள். அவற்றை சமாளிக்க (முன் பார்ப்பன மதப்பிரசாரம் செய்தது போலவே) அரசியலில் தலையிட்டு அரசியல் பிரசாரமும் செய்தார்கள். இதன் பயனாயும், அம்மையாரின் அபார சக்தியாலும் இந்தியா முழுமைக்கும் அரசியல் தலைவராயும் விளங்கினார். 

காலஞ்சென்ற தோழர்கள் தாஸர், பாலர், நேரு முதலியவர்கள் எல்லாம் அம்மையாருக்கு சிஷ்யர்களாக இருந்தார்கள். அம்மையார் ஓடி ஆடித்திரிய சக்தி உள்ளவரையில் ஐயங்கார் கூட்டத்தை பொது வாழ்வில் தலை எடுக்க வொட்டாமல் செய்து கொண்டே வந்தார். இதன் பயனாகவே அம்மை யாருக்கு அரசியலிலும் மதத்திலும் செல்வாக்கு இருக்கும்வரை) தோழர் சி.விஜயராகவாச்சாரியராகிய ஐயங்கார் காங்கிரஸ் பிரசிடெண்டாக முடியாமலேயே போய்விட்டது. இந்தக் காரணத்தால் சென்னை ஐயங்கார்கள் அரசியலில் "அமிதவாதிகள்”ஆகி தோழர்கள் சி.எஸ்.கஸ்தூரி ரங்கய்யங் கார் சி.விஜயராகவாச்சாரியார், சி.ராஜகோபாலாச்சாரியார், எஸ்.சீனிவாசய்யங் கார், முதலிய அய்யங்காரர்கள் ஒன்று சேர்ந்து, மறுபடியும் அம்மையாரின் அரசியல் செல்வாக்கை ஒழிக்க வேண்டியவர்களானார்கள். இதற்குப் பார்ப்பனரல்லாத தோழர்கள் பி.வரதராஜலு, வி.ஓ.சிதம்பரம் பிள்ளை . ஜார்ஜ் ஜோசப், ஈ.வெ.ராமசாமி முதலியவர்களையும், அய்யர் பார்ப்பனரில் தோழர் எஸ்.சத்தியமூர்த்தி அய்யர் முதலியவர்களையும், பயன்படுத்திக் கொண்டு அம்மையாரை எதிர்த்து அம்மையாருக்குப் பல தொல்லைகளும் கொடுத் தார்கள். அம்மையாருக்குச் சரியான போட்டித் தலைவராக தோழர் காந்தி யாரைப் பிடித்துக் கொண்டுவந்து மகாத்மாவாக்கினார்கள். 

இதன் பயனாகவும் அம்மையாரின் வயோதிகத்தின் பயனாகவும் அம்மையார் அரசியலில் சிறுகச்சிறுக, விட்டுக் கொடுத்துக் கொண்டே வந்துவிட்டார்கள் என்றாலும் அரசாங்கத்தின் மூலம் தனது விபூதிப் பார்ப்பன அய்யர் சிஷ்யர்களுக்கு அளவுகடந்த உதவி செய்து கொண்டே வந்தார். தோழர் சர்.சி.பி., போன்றவர்கள் எல்லாரும் உயர்ந்த அந்தஸ்திற்கு அம்மையாராலே ஆக்கப்பட்டவர்கள் ஆவார்கள். அம்மையாரின் அபார சக்தியை ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால், அம்மையார் இந்த உலகம் முழுவதும் ஒரு ஆட்சிக்கு உட்படுத்தி அதன் தலைமை ஸ்தானத் தைக் கொடுத்தால் அதை ஒருகையிலும், அதன் ராணுவ ஆட்சியை மற்றொரு கையிலும் உலக மத (போப்) குருவேலையை உபவேலையாக வும், பார்க்கத் தகுதியும் ஆற்றலும் உடையவர் என்றே சொல்லுவோம். ஆகவே பெண்களுக்கு எவ்வளவு ஞானம் எவ்வளவு தைரியம் எவ்வளவு சக்தி இருக்கின்றது என்று கணிப்பதற்கு அம்மையார் ஒரு ஒப்பற்ற சாதனமா வார். அப்படிப்பட்ட அம்மையார் தனது 86-வது வயதில் முடிவெய்தது பற்றி யாரும் வருந்தவேண்டியதே இல்லை. ஏனெனில் இனி தன்னால் யாதொருகாரியமும் செய்யமுடியாமல் போய்விட்டதென்றால் உடனே முடி வெய்துவிட வேண்டியது தான் நல்லறிவின் குறிப்பாகும். 

ஆகவே அம்மையாரைத் "தாயைப்போலவும் குருவைப்போலவும் தெய்வத்தைப்போலவும்” கருதி அம்மையாரைப் போற்றி வந்த அவரது சிஷ்யர்கள் பெரிதும் மனிதஜீவ இயற்கையை உணர்ந்த ஞானவான்கள் ஆதலால் அப்படிப்பட்டவர்களுக்கு பிறரது அனுதாபமோ ஆறுதலோ அவசியம் இல்லையென்றே கருதுகிறோம். 

குடி அரசு - இரங்கல் செய்தி - 24.09.1933

 
Read 75 times